தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது என்பது இயலாத காரியம்.
கரோனா தீநுண்மி தொற்று அதிகளவில் பரவினால் பாதுகாப்பதற்காக ஏற்கனவே உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில் தனிமைப்படுத்துவதற்கான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து அரசு, தனியார் பள்ளிகளிலும் தனிமைப்படுத்துவதற்கான மையங்களை அமைப்பதற்கு தயார் நிலையில் உள்ள பள்ளிகளின் பட்டியலை அளிக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, சென்னை ஆட்சியர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "அரசு, தனியார் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, கட்டடத்தின் உறுதித்தன்மை, வாகனங்கள் நிறுத்தும் வசதி, சுகாதார வசதிகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பேரிடர் மேலாண்மை முகாம்கள் பள்ளிகளில் இயக்க தயார் நிலையில் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.