சென்னையில் பள்ளி,கல்லூரி மற்றும் காவல் சிறார் மன்றத்தில் பயிலக்கூடிய ஏழை எளிய மாணவர்களின் இணையவழிக்கல்வி பயன்பாட்டிற்காக, Help chennai.org அமைப்பினரும், ஹெச்சிஎல் (HCL) சாப்ட்வேர் நிறுவனமும் இணைந்து 60 கைப்பேசிகள், 50 மடிக்கணினி ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 8) காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், கூடுதல் ஆணையர்கள், ஹெச்.சி.எல் துணைத்தலைவர், தனியார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் குனிஷா அகர்வால், அர்ஷிதா அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காவல் ஆணையரிடமிருந்து மின்னணு உபகரங்களை பெற்றுக்கொண்ட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவர்களிடையே பேசிய காவல் ஆணையர்" கரோனா பரவல் காரணமாக ஒருவருக்கொருவர் உதவும் தருணம் ஏற்பட்டுள்ளது. தற்போது உதவியை பெற்றுக்கொண்ட மாணவர்கள், வாழ்க்கையில் முன்னேறி பிற்காலத்தில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மழையினால் சிசிடிவி கேமராக்கள் ஆங்காங்கே பழுதடைந்திருப்பதால், அதனை உடனடியாக சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் 144 தடை சட்டத்தை பின்பற்றி செயல்பட வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:அரியர் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு!