சென்னை: அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
'மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக , கோர்பிவேக்ஸ் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் தற்போது "கோவோவேக்ஸ்” தடுப்பு மருந்தானது தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 12-17 வயது உடையவர்கள் தனியார் மருத்துவமனைகளில் "கோவோவேக்ஸ்” தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். அதேபோன்று, 12-17 வயது உடையவர்கள், முதல் மற்றும் இரண்டாம் தவணையாக கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த விரும்பினால், அதனை அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.
15-17 வயது உடையவர்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்த வேண்டுமானால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லலாம். இதைத் தவிர 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணையாக கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும்.
ஸ்புட்னிக் -வி தடுப்பூசியைப் பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம். 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படாது. அதேவேளையில், அதனை தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த தகவல்களை அனைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குநர்களும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்’ என சுற்றறிக்கையில் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:வெளிநாடு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்? பூஸ்டர் ஊசி குறித்த முக்கிய அறிவிப்பு