பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜனை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மே 28ஆம் தேதி கைதான நாகராஜன், ஜூன் 11 வரை நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், மேலும் விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
தடகள பயிற்சியாளர் நாகராஜனிடம் விசாரணை
இதனை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம், பயிற்சியாளர் நாகராஜனை 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. நேற்று (ஜூன்4) போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜனை, அவர் பயிற்சி அளித்த பச்சையப்பன் கல்லூரி மைதானம் உள்பட பல இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று காவல் துறையினர் இன்று (ஜூன்5) விசாரணை நடத்தினர்.
சமூக வலைதளத்தில் பாலியல் புகார்கள்
பிரபல தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் சென்னை பாரிமுனையில் பிரைம் ஸ்போட்ஸ் அகடாமி என்ற பெயரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தடகள பயிற்சியை அளித்து வந்தார். விளையாட்டு பயிற்சியின் போது வீராங்கனைகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக நாகராஜன் மீது சமூக வலைத்தளத்தில் புகார்கள் வெளியாகின.