சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 130 ரூபாய்க்கும், கொடைக்கானலில் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளியின் வரத்து மழையின் காரணமாக குறைந்தது. இதனால், தக்காளி விளைச்சல் இல்லாமல், வரத்து குறைந்ததன் காரணமாகவே விலை கிடுகிடுவென உயர்ந்தது.
அன்றாட சமையல் பொருட்களில் முக்கியமாகக் கருதப்படும் காய்கறிகளில் ஒன்றான தக்காளியின் விலை உயர்வினால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும், தக்காளியின் விலையைக் குறைப்பதற்கு அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால், தமிழ்நாட்டில் உள்ள 65 பசுமைப் பண்ணைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டது.
பசுமை பண்ணை காய்கறி அங்காடி, நடமாடும் காய்கறி அங்காடி மூலமாக கொள்முதல் விலைக்கே விற்க திட்டம் எனவும் தக்காளியைப் பதுக்கி வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்து இருந்தார். கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட 62 இடங்களில் செயல்படும் பண்ணை பசுமைக் கடைகளில் ரூபாய் 60க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், தக்காளியின் வரத்து அதிகரித்து விலைக் குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் மேலும் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது. இதனை அடுத்து ஜூலை 4 முதல் சென்னையில் ரேஷன் கடைகளில் தக்காளி ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்பட்டது.