சென்னை:ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 22 ஆயிரத்து 364 திருநர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் வழங்கப்படாமல், அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாகவும், தங்கள் விருப்பம் போல இரு பாலருக்கான கழிப்பிட வசதிகளை தேர்வு செய்து செல்லும் போது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனி கழிப்பிட வசதிகள் வழங்குவதன் மூலம் சமூகத்தில் இருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள மனுதாரர், ஆண், பெண் கழிப்பிடங்கள் தவிர்த்து கூடுதலாக பாலின சார்பற்ற (gender neutral) கழிப்பிடங்களை அமைப்பதன் மூலம் இவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.