மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் முதுகலை அரசியல் அறிவியல் முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தில் சிறுபான்மையினர், திராவிட முன்னேற்றக் கழகம், பொதுவுடமைக் கட்சிகள் குறித்து அவதூறான விஷயங்களும், உண்மைக்குப் புறம்பான விஷயங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்தியாவில் இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளும், அவர்களின் வாழ்க்கை முறையும்தான் வகுப்புவாதத்துக்கான காரணங்கள் என்றும், 71 ஆண்டுகள் பாரம்பரியமிக்க திராவிட முன்னேற்றக் கழகம், இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாகப் பயன்படுத்துவதாகவும், சிறுபான்மையினரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் மீதும் இதே விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.
இதனை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் கவனத்திற்கு நான் கொண்டு சென்றேன். அவர் இதுகுறித்து விசாரித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சரிடம் கலந்து பேசி இப்பாட நூலை தயாரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக நூல்களையும் ஆய்வு செய்ய ஆலோசித்து குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாட புத்தகத்திலிருந்து இந்த விஷம கருத்துகளை நீக்க வேண்டும் என்ற மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்களின் பாடத்திட்ட கையேடுகளைத் தயாரிக்கின்றபோது உயர்கல்வியின் மேன்மையான கோட்பாடுகளை அடையும் வகையில் தரத்தினை உயர்த்திட வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலத்தில் பாடத்திட்டக் குழுவில் ஃபாசிச அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட தகுதியான கல்வியாளர்களை இணைக்க வேண்டும், மதவெறிச் சிந்தனை கொண்டவர்களை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மரத்தடியில் கரோனாவுக்குச் சிகிச்சை: தனியார் கிளினிக்கிற்கு சீல் வைப்பு!