சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”குரூப் 2 பணிக்கான முதன்மை எழுத்து தேர்வு 25ஆம் தேதி காலை மற்றும் மாலை நேரங்களில் 20 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இந்த தேர்வானது தாள் ஒன்று கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் காலையில் நடைபெற்றது. தாள் இரண்டு, பொது அறிவு தாள் பிற்பகலில் நடைபெற்றது. நேர்முகத் தேர்விற்கு தேர்வு செய்வதற்கு தாள் இரண்டில் பெறப்படும் மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
வருகை பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும் விடைத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு காலையில் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.
மாலை தேர்வு மதியம் 2:30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை நடைபெறும் வகையில் மறு வரையறை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மாலையில் தேர்வானது துவக்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக எவ்வித இடர்பாடும் இன்றி நடைபெற்ற முடிந்தது. மாலையில் நடைபெற்ற தேர்வில் 94.30 சதவீதம் தேர்வர்கள் பங்கேற்றனர்.
காலையில் தேர்வானது கட்டாய தமிழ் தகுதி தேர்வாகும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது. மேலும் இந்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இது தகுதி தேர்வு மட்டுமே என்பதுடன் தேர்வாணையத்தின் முன் அனுபவத்தின் படி 98 சதவீதத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இருப்பினும் தேர்வர்களுக்கு காலை தேர்வில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத்தாள் திருத்தும் போது கருத்தில் கொள்ளப்படும். தேர்வாணையத்தின் உடனடி அறிவுறுத்தல்களின் படி மாலை தேர்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், தரவரிசைக்கு கருதப்படும் தாள் இரண்டு, பொது அறிவு தாள் தேர்வானது எந்தவித இடையூறும் இன்றி அனைத்து தேர்வு மையங்களிலும் சமூகமாக நடைபெற்று முடிந்தது.
மேலும் இந்த தாள் இரண்டில் தேர்வர்கள் பெரும் மதிப்பெண்கள் மட்டுமே தர வரிசைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தொகுப்பிற்கும், வருகை பதிவேற்றிற்கும் இடையிலான வரிசை வேறுபாடு காலை தேர்வில் தாமதத்திற்கு காரணம் இந்த வேறுபாடு ஏற்படக் காரணமான அனைவரும் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்” என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணம்!