சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் மாநிலத் தலைமை கட்டுப்பாட்டு அறை எழும்பூர் சிபிசிஐடி வளாகத்தினுள் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் கட்டுப்பாட்டு அறையின் எஸ்பியாக தீபா சத்யன் பணியாற்றி வருகிறார். இந்த காவலன் உதவி செயலி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது காவலன் உதவி செயலி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அது தொடர்பாகக் காவல் கட்டுப்பாட்டு அறையின் எஸ்பி தீபா சத்யன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில் எஸ்பி தீபா சத்யன் கூறியதாவது, "தற்போது வரை காவலன் உதவி செயலியைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள 2 லட்சத்து 79 ஆயிரத்து 656 மக்களால் பதிவிறக்கம் செய்துள்ளனர். சென்னையில் 46 ஆயிரத்து 174 பேரும், மாவட்ட அளவில் அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 15,798 பேரும் காவலன் உதவி செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. காவலன் உதவி செயலியில் 14 தலைப்புகளில் 66 அம்சங்களைக் கொண்டுள்ளது, இது மட்டுமல்லாமல் அவசர அழைப்பான 100, 112, 101 ஆகியவையும் இந்த செயலி மூலம் அழைத்து உதவிகள் பெறலாம் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 0.36% அதிகாரப்பூர்வ மற்ற காவலன் உதவி செயலியைப் பதிவிறக்கம் செய்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கையைக் கூட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தினமும் 13 லட்சம் ஐவிஆர் அழைப்புகள் (Interactive voice response call) வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.