சென்னை:தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, 15 முதல் 17 வயதுடையவருக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் ஜனவரி 3ஆம் தேதியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10ஆம் தேதியும், 12-14 வயதுடையவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் மார்ச் 16ஆம் தேதி அன்றும் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஒற்றை இலக்கத்தில் வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மனநல ஆலோசனை: அந்தத் திட்டத்தின் கீழ் 99 லட்சத்து 47,310 பயனாளிகளும், தொடர் சேவையை 2 கோடியே 34 லட்சத்து 46,388 பேரும் டிசம்பர் 18ஆம் தேதி வரையில் பயனடைந்துள்ளனர். சாலை விபத்தில் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டத்திலும் 1,33,202 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, 118 கோடியே 48 லட்சத்து 54,579 ரூபாய் நிதி டிசம்பர் 18ஆம் தேதி வரையில் செலவிடப்பட்டுள்ளது.
மருத்துவப்படிப்பில் முதுகலையில் புதிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இளங்கலை மருத்துவப்படிப்பில் முதல் முறையாக தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டணத்தை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை குழுவிற்கு செலுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.
இதனால் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டும் செலுத்தும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டன.
பள்ளி மாணவர்களிடம் தற்கொலை எண்ணம் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, அவர்களுக்கு மனநலம் என்ற திட்டத்தின் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்கு மனநல நல்லாதரவு மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முதலிடத்தில் தமிழ்நாடு: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் மட்டும் அமைத்தாலும், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் மத்திய அரசிடம் 6 புதிய மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.