சென்னை: அசோக் நகரைச் சேர்ந்தவர், பிரசாந்த் ராஜ் (21). இவர் கே.கே.நகர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் உணவு டெலிவரி செய்யும் கிடங்கில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று (பிப்.12) இரவு 9.40 மணியளவில் பிரசாந்த் வீட்டிலிருந்து புறப்பட்டு, வேலைக்கு நடந்து சென்றார்.
அப்போது கேகே நகர் ராஜமன்னார் சாலை சிவன் பார்க் அருகே பிரசாந்த் சென்று கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பிரசாந்த் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துவிட்டுக் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
அதேபோல் ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்டு சென்னை முகப்பேரில் வசித்து வரும் ராமலிங்க சாஸ்திரி (59) என்பவர், நேற்று கேகே நகரில், தான் புதிதாகக் கட்ட உள்ள வீட்டுக்கு வாஸ்து பார்த்துவிட்டு சாலிகிராமம் 80 அடி சாலையில் நேற்றிரவு 9.50 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தொடர்ந்து மாம்பலம் தண்டபாணி தெரு வழியாக நடந்து சென்ற ஒருவர் மற்றும் தனசேகர் தெருவில் நடந்து வந்த ரேகா என்ற பெண் உள்ளிட்ட 6 இடங்களில் செல்போன் பறிப்பு நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு மொத்தமாக ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் செல்போனை பறி கொடுத்த நபர்கள் கேகே நகர், அசோக் நகர் மற்றும் தியாகராய நகர் போன்ற காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து முதற்கட்ட விசாரணையைக் காவல் துறையினர் தொடங்கினர். அப்போது அனைத்து செல்போன் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர்கள் எனத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இதுதொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:இன்ஸ்டாகிராமில் கடன் தேடுபர்களே குறி! பெண்களிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் சென்னையில் கைது!