சென்னை:அரசுப் பள்ளிகளில் உள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து சரியான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்காமல் இருப்பதால், ஆசிரியர்கள் மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், “முன்னதாக அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் இனி நடைபெறாது என முதலில் தகவல்கள் வெளிவந்தன.
இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் உறுதி செய்த நிலையில், கடும் எதிர்ப்புகள் வந்தன. இதனையடுத்து, மீண்டும் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். இதற்காக சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
ஆனால், அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வார காலம் ஆகியும் அரசுப் பள்ளிகளில் இதுவரை எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. மாறாக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நடத்தக்கூடிய பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கையில் தொடரும் குழப்பம் - தீர்க்குமா பள்ளிகல்வித்துறை? அரசுப் பள்ளிகளில் பிற வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் காலதாமதமாக தொடங்கியது. எல்கேஜி யூகேஜி சேர்க்கையில் ஏற்பட்டுள்ள குளறுபடி போன்றவை காரணமாக இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு ஒரு கேள்விக்குறி - 7 ஆண்டுகளில் 414 பயிற்சி நிறுவனங்கள் மூடல்!