தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர், கரோனா பரவல் காரணமாக, ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கச்சத்தீவு மீட்பு, போக்குவரத்து வசதிகளுக்கு முன்னுரிமை, சுற்றுலா மேம்பாடு எனப் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,
கச்சத்தீவை மீட்க அழுத்தம்:
- 'கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட நமது மீனவர்களின் சமூக நலன்களை இந்த அரசு பாதுகாக்கும்;
- இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் உயிரிழப்பு ஏற்படுவதும் போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தர தீர்வுகாண ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்;
- மேலும் உள்நாட்டு மீனவர்களின் அனைத்து நலன்களையும் பாதுகாப்பதற்காக மீனவர்கள் நலனுக்காக தேசிய ஆணையத்தை அமைக்க ஒன்றிய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தும்' என்றார்.
போக்குவரத்து வசதிகளுக்கு முன்னுரிமை:
மேலும்,
- ’நெடுஞ்சாலை கட்டமைப்புகளின் தரத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். முக்கியமான நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் வலுப்படுத்தவும் தேவையான திட்டம் வகுக்கப்படும்.
- அனைத்து முக்கிய நகரங்களுக்கும் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும். கடந்த ஆண்டுகளில் காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரவாயல் சென்னை துறைமுகம் வரையிலான உயர் மட்ட சாலை திட்டப் பணிகளை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும். இத்திட்டத்தில் 50 விழுக்காடு செலவு பகிர்வு என்ற அடிப்படையில், ஒன்றிய அரசு தன்னுடைய பங்கு மூலதனத்திற்கான ஒப்புதலை விரைவாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
- மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெருதிரள் விரைவுப் போக்குவரத்து அமைப்புக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.
பாரம்பரிய சுற்றுலா ஊக்குவிக்கப்படும்:
- ’தமிழ்நாட்டின் சுற்றுலா திறனை முழுமையாக வெளிக் கொணரும் வகையில் ஒரு பெருந்திட்டம் நடப்பாண்டில் வெளியிடப்படும்; பழமையான கோட்டைகளும் அரண்மனைகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பாரம்பரிய சுற்றுலா ஊக்குவிக்கப்படும்
- தமிழ்நாட்டின் இந்து அறநிலையத்துறை சட்டம் நம் நாட்டிற்கு ஒரு முன்மாதிரி சட்டமாக விளங்குகிறது. கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துக்கள் பாதுகாக்கப்படும்.
- அனைத்து முக்கிய இந்து கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் கோயில்களில் பராமரிப்பைச் செயல்படுத்துவதற்கும் சில ஆலோசனைகளை வழங்குவதற்கு மாநில அளவிலான ஒரு உயர் மட்ட ஆலோசனைக் குழு மீண்டும் அமைக்கப்படும்’ என்றும் ஆளுநர் தன் உரையில் அறிவித்தார்.
- இதையும் படிங்க: '15 நாள்களில் ஸ்மார்ட் கார்டு' - ஆளுநர் அறிவிப்பு