சென்னை: ’நில அபகரிப்புத் தொடர்பாக அளித்தபுகார் மனு மீது வழக்குப்பதிவு செய்த திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை, புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 6 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை அல்லது வழக்கை முடித்து வைத்து அறிக்கையை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தற்போது வரை திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அமல்படுத்தவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அலியா பானு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆய்வாளர் ஜோசப் செல்வராஜ் ஆஜராகி, புலன் விசாரணை முடிந்துவிட்டதாகவும், திருவள்ளூரில் புதிதாக உருவாக்கப்பட்ட நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 5 பேருக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மனுதாரர் வழக்கின் முதல் தகவல் அறிக்கை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அதை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க தாமதமாகியதாகவும் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து நீதிபதி, காலதாமதத்துக்கு காவல் துறை தரப்பில் கூறப்படும் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். எனவே, குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அது குறித்த அறிக்கையை வருகிற ஜூன் 10ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
காவல் ஆய்வாளர் மீதான வழக்கு; குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு - chennai high court
திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் துறை ஆய்வாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல் ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; முடித்து வைத்த சென்னை உயர் நீதிமன்றம்