நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் குறிப்பாக ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் நோய்த் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சென்னை முழுவதும் தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை முகக்கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல் மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருப்பினும் அந்த நோய் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்தப் பரவலை கட்டுப்படுத்த தொற்று அதிகம் உள்ள பகுதியை தனிமைப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துவருகிறது. அதன்படி தற்போது 158 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இந்த 158 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வாங்கித் தருவதற்காக தன்னார்வலர்கள் குழுவை மாநகராட்சி அமைந்துள்ளது. இந்நிலையில், மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.