சென்னை: சென்னை துறைமுகத்தில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான கண்டெய்னர் லாரிகள் மூலமாக சரக்குப் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன. அதிகளவிலான கண்டெய்னர்கள் கையாளப்படுவதால், சென்னை முழுவதும் 33 இடங்களில் சரக்கு கையாளும் பெட்டக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் திருவொற்றியூர் பகுதியில் அதிக பாரம் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரிகளுக்கு ஏழு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இது குறித்து தமிழக கண்டெய்னர் உரிமையாளர் சங்க செயலாளர் அருள்குமார் செய்தியாளரிடம் பேசினார்.
கண்டெய்னர் லாரிகள் அபராதம் விதிப்புக்கு கண்டிப்பு
அவர் பேசுகையில், “நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக சென்னை துறைமுகத்திலிருந்து கண்டெய்னர்களை லாரியில் எடுத்துவரும் பணிகளைச் செய்துவருகிறோம். சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் கண்டெய்னர்களை சரக்கு கையாளும் பெட்டக மையத்திற்கும், சரக்கு கையாளும் பெட்டக மையத்திலிருந்து ஏற்றுமதியாகும் கண்டெய்னர்களை துறைமுகத்திற்கும் எடுத்துச் செல்கிறோம்.
இரண்டு இடங்களிலும் கண்டெய்னர் சீல் செய்யப்பட்டு அனுப்பப்படுவதால், கண்டெய்னர்களில் எவ்வளவு எடை உள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது. மேலும் எங்கள் வாகனங்களில் கண்டெய்னருடன் சேர்த்து 32 டன் வரையில் எடை ஏற்றலாம்.