தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே மருத்துவமனையில் குவியாதீர்கள் - ‘104’ என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்! - corona test

சென்னை: நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளில் காலியாகவுள்ள நிலவரத்தை அறிவதற்காக 'கோவிட் பெட் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ‘104’ என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு படுக்கை வசதிகளை அறிந்து கொள்ளலாம்.

Narayana Babu
மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு

By

Published : May 6, 2021, 8:49 PM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே மருத்துவமனையில் குவிவதைக் குறைக்க வேண்டும், மற்ற அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்தார்.

இதுதொடர்பாக நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், தமிழ்நாட்டில் போதுமான படுக்கை வசதிகள் இருக்கின்றன. கடந்த ஆண்டு முதல் மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டன. இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 52,000 படுக்கைகளும், மருத்துவச் சேவை இயக்குனரகத்தின் கீழ் 30,000 படுக்கைகளும், பொது சுகாதார இயக்குனரகத்தின் கீழ் 30,000 படுக்கைகள் என, 1 லட்சத்து 12 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. மேலும் கரோனா தனிமைப்படுத்தும் மையங்களில் 25 ஆயிரம் படுக்கைகள் என, 1 லட்சத்து 40 ஆயிரம் படுக்கைகள் உள்ளன.

மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு

மேலும் தனியார் மருத்துவமனைகளில் 25 ஆயிரம் படுக்கைகள் என, 1 லட்சத்து 65 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. எனவே தினசரி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான அளவிற்குப் படுக்கை வசதி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்ஸிஜன், ரெமிடெசிவர் மருந்தும் இருப்பில் உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் 64 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியும் போட்டுள்ளோம். கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதியில் இருந்து 2-வது அலை கரோனா தொற்று அதிகரித்து பரவி வருகிறது. மே மாதம் 5ஆம் தேதி 23 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னையில் மட்டும் 6,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது 25 விழுக்காடு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 75 விழுக்காடு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. எனவே இந்த மாவட்டங்களிலும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

திருவள்ளுர், செங்கல்பட்டில் உள்ளவர்களும், சென்னையில் சிகிச்சை பெற வருகின்றனர். எனவே அதற்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளையும், ஆக்ஸிஜன் படுக்கை வசதியையும் அதிகரித்துள்ளோம். சென்னையில் ஏற்கனவே 4,000 ஆக்ஸிஜன் படுக்கை உள்ளது.

அதனுடன் கூடுதலாக 2,900 ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரித்துள்ளோம். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 14,200 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் உள்ள 20 அரசு மருத்துவமனைகளில் 3,000 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா தனிமைப்படுத்தும் மையங்களிலும் படுக்கை வசதியை ஏற்படுத்தி உள்ளோம். அதே நேரத்தில் நோயாளிகள் அனைவரும் ஒரே இடத்திற்குச் சென்று குவியக்கூடாது. நோயாளிகள் பரவலாகச் செல்லும் போது, ஆம்புலன்ஸ் அங்கு காத்திருக்கும் நிலைமைத் தவிர்க்கப்படும்.

நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளில் காலியாக உள்ள நிலவரத்தை அறிவதற்காக 'கோவிட் பெட் டிஎன்இஜிஏ' (covid bed tnega) என்கிற அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 104 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு படுக்கை வசதிகளை அறிந்து கொண்டு செல்ல வேண்டும். அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கை, மருந்துகள் இருப்பு உள்ளன. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மார்ச் 5ஆம் தேதி முதல் 2 வது அலை பரவத் தொடங்கியது. இந்த அலையில் இருந்து அனைவரையும் பாதுகாக்க, அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்தால் உடனடியாக குறைந்து வரும். தடுப்பூசி போடுவது, கூட்டத்தில் சேராமல் இருப்பதும் மிகவும் முக்கியமானதாகும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும். 10 விழுக்காட்டிற்கும் குறைவான பாதிப்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் இருக்கலாம். நுரையீரல் பாதிப்பு இல்லாமல் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 95 விழுக்காட்டிற்கு மேல் இருந்து வீட்டில் தனியாக இருப்பதற்கான அறைகள் இருந்தால் , வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 85 விழுக்காட்டிற்கு குறைவாக இருந்தால் ஆக்ஸிஜன் படுக்கையைப் பயன்படுத்தலாம். உடல் நலம் நன்றாக இருப்பவர்கள் ஆக்ஸிஜன் படுக்கையைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது தற்பொழுது வரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கிடையாது.

720 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் சேமித்து வைக்கும் வசதி உள்ளது. மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் அளவிற்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருவதற்கு தமிழ்நாட்டில் வசதி இருக்கிறது. மேலும் தேவை அதிகரிக்கும் போது, ஆக்ஸிஜன் உற்பத்தி யூனிட் மருத்துவமனைகளில் தொடங்க உள்ளோம்.

எனவே ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடையாது. அனைவரும் முகக்கவசம் அணிந்து, தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் 3வது அலை வருவதற்கு வாய்ப்பே கிடையாது என கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details