பொருளாதார தாராளமயமாக்கல், உலகமயமாக்கலுக்கு பிறகு நுகர்வோர் ஒரு முக்கியமான மரியாதைக்குரிய நபராக மாறிவிட்டனர். உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகள் அதிகளவில் கொள்முதல் நடைபெற்று வருவதால், மோசடிகள் இழப்புக்கு எதிராக, அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட வேண்டும். நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், அந்தந்த நுகர்வோரின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் முக்கியம்.
நுகர்வோருக்கு விழிப்புணர்வு இல்லை
இன்று பெரும்பாலான நுகர்வோர், தங்களது உரிமைகள் குறித்து சரியான புரிதலைக் கொண்டிருக்கவில்லை; அதன் விளைவாக அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். குறிப்பாக, இது கிராமப்புறங்களில் உள்ள நுகர்வோருக்கு பொருந்தும். கடந்த ஆண்டு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986இல் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவில், 2019 ஆகஸ்ட் 9 அன்று குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டார்.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்தல், நெறிமுறையற்ற வணிகங்களை கட்டுப்படுத்துதல், குறை தீர்க்கும் முறையை வேகப்படுத்துதல், இ - காமர்ஸ் பரிவர்த்தனைகள் ஆகியன, இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சட்டம் நுகர்வோரை மேலும் பலம் பொருந்தி மேம்படுத்துவதில் ஒரு ’மைல்கல்’ எனலாம். அமெரிக்காவின் ‘அமெரிக்க கூட்டமைப்பு வர்த்தக ஆணையம்’ மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ‘ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம்’ ஆகியவை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நுகர்வோருக்கான தளங்களை மாற்றியமைக்கும் வகையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், சட்டவிரோத வணிகங்களைத் தடுப்பதற்காகவும், இச்சட்டத்தின் கீழ் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
உரிமை மீறப்பட்டால் புகார் அளிக்கலாம்
ஒழுக்கக்கேடான வர்த்தகம் நடைபெறுவதாகவோ, உரிமைகள் மீறப்படுவதாகவோ புகார் எழுந்தால், மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை பெறலாம். புதிய சட்டம், நுகர்வோர் ஆணையங்களின் வரம்புகளையும் பரிந்துரைத்துள்ளது. மாவட்ட அளவில் ஆணையம், ரூ.1 கோடி மதிப்பிலான வழக்குகளை எடுத்துக்கொள்ளலாம். தேசிய ஆணையம் ரூ.1 கோடி முதல் ரூ. 10 கோடி மதிப்பிலான வழக்குகளை எடுத்துக்கொள்கிறது. மாவட்ட அளவிலான ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து, மாநில ஆணையத்திலும் அதன் பிறகு தேசிய ஆணையத்திலும் முறையிடலாம். அதேபோல், தனது தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய, ரத்து செய்ய மாநில ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. இதன் காரணமாக - தீர்ப்பில் திருத்தம் கோரும் சூழ்நிலை இருந்தால், அவற்றை விரைவாக சரிசெய்ய முடியும்.
கடுமையான அபராதம்
இதன் விதிமுறைகளையும், ஒழுங்கு விதிகளையும் மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. நம்பத்தகாத அறிவிப்புகள் அல்லது விளம்பரங்கள் மூலம் நுகர்வோர் தவறாக வழிநடத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற மோசடியான அறிவிப்புகள், விளம்பரங்களில் ஈடுபடும் பிரபலங்கள், பிற விளம்பரங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படுவார்கள். பொருட்களின் தரத்தால் எந்தவொரு தீங்கும் ஏற்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டவாறு செயல்படுத்தப் படாவிட்டால், ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனையும், ரூ. 20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். நுகர்வோர் நலன்களுக்கு எதிராக செயல்பட்டதற்காக உற்பத்தியாளர் மற்றும் சேவை வழங்குவோருக்கும் சிறை தண்டணையும், அபராதமும் விதிக்கப்படும்.