சென்னை:10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாவது திருப்புதல் தேர்வை எந்தவித பிரச்சினையுமின்றி நடத்துவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் இன்று (மார்ச் 08) ஆலோசனை நடத்துகிறார். பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் காலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பாலியல் குற்றச்சாட்டுகளை எவ்வாறு விசாரணை செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடக்கக்கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை அளிக்கப்படவுள்ளது. அதில் குறிப்பாக மாணவர்களின் எண்ணிக்கை பூஜியமாக உள்ள பள்ளிகளின் விவரங்கள் பெறப்படவுள்ளது.
அதேபோல் ஒற்றை இலக்கத்தில் எத்தனை பள்ளிகளில் மாணவர்கள் பயில்கிறார்கள் என்ற விவரங்களும் பெறப்படுகிறது. மேலும் பல்வேறு திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்தும், தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் குறித்தும் விவரிக்கப்படவுள்ளது.