சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (டிச.10) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாட்டில் மாண்டஸ் புயலால் ஏற்பட்டப் பாதிப்புகள் குறித்தும், தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
மாண்டஸ் புயல், மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை கரையைக் கடைந்தது. அப்போது 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது. மேலும் கோவளம், கிழக்கு கடற்கரைச் சாலையில், அதிகமாக காற்று வீசியது. மேலும் மரங்கள், மின் இணைப்புகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை முதலே, கிழக்கு கடற்கரை சாலையில் மாண்டஸ் புயல் பாதிப்பால் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை ஆய்வு செய்தார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் மற்றும் வடசென்னை பகுதியில் உள்ள காசிமேடு துறைமுகம் பகுதி உள்ளிட்டப் பகுதிகளில் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தலைமையில், தமிழ்நாட்டில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் முழுமையான சேத விவரங்கள் எடுக்கப்பட்டு அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இக்கூட்டத்தில் தலைமைச்செயலாளர் முனைவர் வெ. இறையன்பு , புயல் மழையால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:புயல்: காற்றின் வேகம் தாங்காமல் சரிந்து விழுந்த காவல்துறையின் செல்போன் டவர்