சென்னை: தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தப்படி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பொழியும் மழை நீரை சேகரித்து, அப்போதைய கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் வட்டங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் 1967ஆம் ஆண்டு பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாய் திட்டம் செயல்படுத்தபட்டது.
10 அணைகள் 4 மின் உற்பத்தி நிலையங்கள், 7 பாசன கால்வாய்கள், 6 முக்கிய கால்வாய்கள் ஆகியவற்றை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது. ஆரம்பத்தில் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்ற நிலையில், தற்போது 4 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த நிலையில், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டக் கால்வாயிலிருந்து தமிழகப் பகுதியில் ஆயக்கட்டு எனப்படும் பாசன பரப்புக்கு அப்பால் உள்ள பகுதிகளில் ஆயக்கட்டுதாரர்கள் அல்லாதோர் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக் கூடாது, ஆயக்கட்டு பகுதியில் தண்ணீர் எடுக்கும் ஆயக்கட்டுதாரர்கள் அல்லாதோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கால்வாயிலிருந்து வர்த்தகப் பயன்பாட்டிற்கு தண்ணீர் எடுப்பதைத் தடுக்க வேண்டும், ஆயக்காட்டுதாரர்களின் நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, "1967ல் பிறப்பித்த அரசாணையில் கால்வாயிலிருந்து எவ்வளவு தூரத்தில் கிணறுகள் தோண்டலாம்? எத்தனை குதிரைத்திறன் சக்தி கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தலாம்? உள்ளிட்டவற்றை 50 ஆண்டுகளுக்கு முன்பே வரையறுத்துவிட்டதால், மீண்டும் மறு ஆய்வு செய்ய அவசியம் இல்லை.
ஆயக்கட்டு பகுதிகளில் நிலங்களை வைத்திருக்ககூடிய ஆயக்கட்டுதாரர்கள், அவர்களின் திறந்தவெளி கிணற்றிலிருந்து 5 மற்றும் 10 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டாரை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்ற விதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அதில் விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட கிணறுகளுக்கான மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாய் திட்ட நீரை எந்த வர்த்தகப் பயன்பாட்டிற்கும் எடுக்கக்கூடாது என்றும், அப்படி எடுக்கப்பட்டால் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், கால்வாயின் இருபுறத்திலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கக் கூடாது என்றும், ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தால் அவற்றிற்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும் எனவும் நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த திட்டத்தை வகுக்கும்போதே, இரு மாநில அரசுகளும் இடைமலையாறு மற்றும் ஆனைமலையாறு ஆகியவற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டி, கேரள அரசின் ஒத்துழைப்புடன் அது விரைந்து கட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதி தண்டபாணி, வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கோயில் சொத்துகள் மீட்கப்பட வேண்டும்: இந்து அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!