சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் கரோனா நிவாரண நிதியை அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண நிதி - அரசு பரிசீலனை - justice
சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் கரோனா நிவாரண நிதியை அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நான்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதில் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் 4,000 ரூபாய் நிவாரண உதவியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவர்களுக்குக் கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நிவாரண உதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:'போக்குவரத்து தாெழிலாளர்களையும் முன்களப்பணியாளராக அறிவிக்க வேண்டும்' - ஓபிஎஸ்