சென்னை:விஜயகாந்த் என்னும் விஜயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள ராமானுசபுரம் என்ற சிற்றூரில் 25 ஆகஸ்ட் 1952ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்ததால் விஜயகாந்த் மதுரையிலேயே வளர்ந்தார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருந்த நடிகர் விஜயகாந்த், 14 செப்டம்பர் 2005ஆம் ஆண்டு, மதுரையில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில், 'தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அக்கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து, 2006ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று முதல் முறையாகச் சட்டப் பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார். அந்தத் தேர்தலில், தேமுதிக வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், அவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் முதல்முறையாக இயக்கி, தயாரித்து, நடித்து டிசம்பர் 10, 2010இல் வெளிவந்த விருதகிரி (Virudhagiri) திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் விஜயகாந்தின் தயாரிப்பாளர் இமேஜை சற்று உயர்த்தியது. விருதகிரி படத்தின் தலைப்பு, விஜயகாந்த் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில் மூலவரைக் குறிப்பதாகவும், விருத்தாசலம் மக்களைப் பெருமைப்படுத்துவதற்காகவும் இந்தத் தலைப்பு சூட்டியதாகவும் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் அடுத்ததாக 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கிய விஜயகாந்தின் தேமுதிக 28 இடங்களில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக அமரும் அளவிற்கு உயர்ந்தது. இந்த தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் இருந்து மாறி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் களமிறங்கி வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்; அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு!