பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபடுகிறது. இந்தப் போராட்டம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களும், அதன் விலையைக் குறைக்கக்கோரி, ஒன்றிய அரசை வலியுறுத்தி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கரோனா விதிகளை பின்ற்றி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெரியளவில் எரிபொருள் விலையில் மாற்றம் இல்லாத நிலையில், தேர்தலுக்குப் பின் அதன் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வருவதாக ஆளும் பாஜக கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த மே 29ஆம் தேதி நாட்டிலேயே முதல்முறையாக மும்பையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.100-ஐ தாண்டி விற்கப்பட்டது. அதேபோல், நேற்றைய நிலவரப்படி, மும்பையில், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.101.53க்கும், டீசல் ரூ.93.57க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தேசிய தலைநகரின் பல்வேறு இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு காங்கிரஸ் பொருளாளர் பவன் பன்சால், பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஹரிஷ் ராவத், அஜய் மேக்கன், தேவேந்திர யாதவ், கவுரவ் கோகாய் ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர்.
தமிழ்நாட்டில் நடைபெறுகிற போராட்டங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், மக்களவை, சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட, வட்டார, காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் கே எஸ் அழகிரி பங்கேற்கிறார்.