சென்னை:சென்னை ராயப்பேட்டை சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பட்டியலின பிரிவின் மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “த்ரிஷா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டுவதைப்போல், மணிப்பூர் பெண்கள் பாதிக்கப்படும்போது நடிகை குஷ்பு பேசாமல் கோமாவில் இருந்தாரா?
மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்த குஷ்பு, பட்டியலின மக்கள் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பட்டியலின மக்கள் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதை நீக்கி, நடிகை குஷ்பு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கவில்லை என்றால், குஷ்பு வீட்டை முற்றுகையிட்டு, அவர் தமிழகத்தில் எங்கும் செல்ல முடியாத சூழலை உருவாக்குவோம்.
நடிகர் ரஜினிகாந்த், ராதா ரவி போன்றோரும் நடிகைகள் குறித்து தவறாகப் பேசியிருக்கிறார்கள். ஆனால், மன்சூர் அலிகான் சிறுபான்மையினர் என்பதால், பாஜகவினர் அவருக்கு நெருக்கடி தருகின்றனர்" என்று கூறினார்.
மேலும், “பட்டியலின மக்களை இழிவாகக் கூறிவிட்டு அதற்கு பிரெஞ்சு மொழியில் விளக்கத்தைச் சொல்வது ஏற்க முடியாது என்றும், மன்னிப்பு கேட்காத பட்சத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் துறையிலும் புகார் அளிக்க உள்ளதாக" அவர் தெரிவித்தார்.
முன்னதாக இவர் வெளியிட்ட அறிக்கையில், “சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பு அவமதித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியினருக்கே உரித்தான சாதிய மனோபாவத்தை விஷமாக கக்கியிருக்கிறார், குஷ்பு.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற எலும்புத்துண்டுக்காக எப்படி வேண்டுமானால் பேசலாம் என்று நினைக்கிறாரா குஷ்பு? நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்து கொண்டபோது, இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்? பாஜகவின் கே.டி.ராகவன் என்ற தலைவர், ஒரு பெண்ணுடன் ஆபாசமாகப் பேசியபோது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்? பாஜகவில் மகளிர் நிர்வாகிகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானபோது, இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்? மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்?" என்ற கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பி இருந்தார்.
மேலும், "குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது. தமது தவற்றைத் திருத்திக் கொண்டு, அந்தப் பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும். அதோடு, அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்" என்று அவர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:பழங்குடியின சான்றிதழ் கேட்டு தலையில் தேங்காய் உடைத்து போராட்டம்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?