சென்னை: பிரதமர் மோடி குறித்துப் பேசியது தொடர்பாக, அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தியின் பதவி பறிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனால், நாடெங்கும் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, “இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம்” என்ற தலைப்பில், இளைஞர் காங்கிரஸ் கல்யாணசுந்தரம் தலைமையில், வாயில் கருப்பு துணி கட்டியபடி, புதுச்சேரி காமராஜர் சிலையின் கீழ், காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இவ்வாறு பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், தமிழகச் சட்டமன்றத்திற்குக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து பேரவையில் பங்கேற்றனர்.
தமிழக சட்டசபையில், ராகுல் காந்தியைப் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ததைக் கண்டித்து, அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியிலிருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒரே பேருந்தில் பயணம் செய்தனர்.
மேலும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு, அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். மேலும், ராகுல் காந்திக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்ற பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன தீர்மானம் மேற்கொண்டனர்.