சென்னை: தமிழக காங்கிரஸின் எஸ்.சி துறை சார்பில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிடும் போராட்டம் இன்று (நவ.28) சாந்தோம் நெடுஞ்சாலையில் நடைபெற்றது.
நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷாவை குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு அண்மையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது சமூக வலைத்தளத்தில் குஷ்புவிற்கு எதிராக கருத்து பதிவிட்டவருக்கு பதில் அளிக்கும் விதமாக குஷ்பு பதிவிட்டிருந்த பதிவில் "சேரி மொழி" என்று குறிப்பிட்டதற்கு பல்வேறு அமைப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் எஸ்.சி.துறை கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தியது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸின் எஸ்.சி துறை சார்பில், சென்னை பட்டினப்பாக்கத்தில், உள்ள நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிடும் போராட்டமானது இன்று நடைபெற்றது. இந்த போராட்டமானது, தமிழக காங்கிரஸின் எஸ்.சி துறை மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் எஸ்.சி துறை நிர்வாகிகள் கலந்துக் கொண்டு நடிகை குஷ்புவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதைத் தொடர்ந்து, குஷ்புவின் உருவப்படத்திற்கு, செருப்பு மாலை அணிவித்து துடப்பத்தால் அடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.