சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னை:சென்னை வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (மார்ச். 2) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, எம்பிக்கள் ஜோதிமணி, ஜெயக்குமார் மற்றும் சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, "ராகுல் காந்தியும், முதலமைச்சர் ஸ்டாலினும் மக்களுடைய மனதில் நீங்காத இடத்தில் உள்ளனர். தமிழ்நாடு அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு கொடுத்த உறுதி மொழியை 80 சதவிகிதத்திற்கு மேல் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கிறது. மக்களுடைய அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. எனவே இந்த அரசு மக்கள் இயக்கமாக இருக்கிறோம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பொருத்தவரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டனிக்கு நிச்சயம் வெற்றி என்று உண்டு. அதிமுக அவர்களுடைய அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை, எனவே சஞ்சலத்தில் இருக்கிற தன்னம்பிக்கை இல்லாத ஒரு கட்சியை மக்கள் விரும்பமாட்டார்கள்.
காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது என முதலமைச்சர் சொல்லியிருப்பது ஆழம் நிறைந்தது. இந்தியா முழுவதும் எதிரொலித்துள்ளது. அற்புதமான வார்த்தையை அறைகூவலாக, பிரகடனமாக சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின், இது ஒரு பொதுவான கருத்து. மூன்றாவது அணியை மக்கள் விரும்ப மாட்டார்கள். ஒத்த கருத்துடன் உள்ள கட்சிகளை கூட்டணிக்குள் ஒருங்கிணைப்போம்.
கேஸ் சிலிண்டர் விலையை பிரதமர் மோடி தொடர்ந்து உயர்த்துகிறார். அவரின் பொருளாதார கொள்கை என்ன? அவர் தான் விளக்கம் தர வேண்டும். இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயரும் பொழுது தான் பெட்ரோல், டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலையும் உயரும். ஆனால் மோடி அரசாங்கம் அதானிக்கு இந்தியாவை தாரை வார்த்து கொடுத்துள்ளது. அதானி குடும்பம் வாழ்கிறது இந்தியா விழுகிறது, இதுவே அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்திற்கான காரணம்" என தெரிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கை கைப்பற்றும் ஈவிகேஎஸ் ? - வெளியேறிய அதிமுக வேட்பாளர்