தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 4, 2021, 6:17 PM IST

சென்னை: உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றி இருவரைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை உத்தர பிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்தனர். இதனைக் கண்டித்து நாளை(அக்.5) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

இதன்படி தமிழ்நாட்டிலும் பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

8 பேர் உயிரிழப்பு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய உள்துறை இணைஅமைச்சர் அஜய் மிஸ்ரா, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அந்தப் பகுதிக்கு வந்தபோது, விவசாயிகள் பெருமளவில் திரண்டு கறுப்புக் கொடி ஏந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திக் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அமைச்சரின் மகனை கைது செய்ய கோரிக்கை

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஓட்டி வந்த கார் விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனால் கோபமடைந்த விவசாயிகள் போராட முற்பட்டபோது, அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில், பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு காரணமான ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

வீட்டுக் காவலில் பிரியங்கா காந்தி

வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் உ.பி. அரசின் காவல்துறையினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை கண்டிக்கிற வகையிலும், இதில் உயிர்நீத்த விவசாயிகள் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறவும் முற்பட்ட அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை உத்தரப் பிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, காவல்துறையினர் காவலில் வைத்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற அவரை தடுத்தது அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற முற்பட்ட பிரியங்கா காந்தி மீது காவல்துறையினர் அடக்குமுறையை ஏவி அவரை தாக்க முற்பட்டுள்ளனர். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதையும், தாக்கப்பட்டதையும் கண்டித்து நாளை ஆர்பாட்டம் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கைதை கண்டித்து பிரியங்கா காந்தி உண்ணாவிரதம்

ABOUT THE AUTHOR

...view details