சென்னை:தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று ஜூலை (17) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான பொன் கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றினையும் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்பாக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் சம்பந்தப்பட்ட இடங்கள், வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர்.
கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி சோதனையைத் துவங்கிய நிலையில் ஜூன் மாதம் 14-ஆம் தேதி அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் எதிர்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலையில், இன்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில் சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, விழுப்புரத்தில் உள்ள எம்.பி பொன் கௌதம சிகாமணியின் வீடு, சம்பந்தப்பட்ட இடங்கள் என 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மீண்டும் ஒரு திமுக அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், “சமீபத்தில் தான் அமைச்சர் பொன்முடி மீது சுமத்தப்பட்டு இருந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்தார். தற்போது நடைபெறும் சோதனையை அவர் சட்டப்படி மூலம் சந்திப்பார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இதற்கெல்லாம் நிச்சயம் பதில் அளிப்பார்கள்” எனத் தெரிவித்து இருந்தார்.
அமைச்சர் பொன்முடி, எம்.பி கௌதம சிகாமணி வீடுகளில் அமலாக்கத்துறை சோதை நடத்துவதற்கு பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களும், கட்சி பிரமுகர்களும் கண்டனம் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன கார்கேவும் அமலாக்கத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு முன்பாக தமிழக கல்வி அமைச்சர் கே.பொன்முடிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனையை கண்டிக்கிறோம். எதிர்கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் இது மோடி அரசின் யூகிக்கக்கூடிய ஸ்கிரிப்டாக மாறிவிட்டது.
சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் கட்சிகளின் கூட்டணியை தடுக்க பாஜக திடீரென விழித்துள்ளது. ஜனநாயகத்தை மிதிக்கும் இந்த கோழைத்தனமான தந்திரங்களுக்குச் சளைத்திருக்க மாட்டார்கள், மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக ஒரே எண்ணம் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பொன்முடி வீட்டில் ரெய்டா..? - எனக்கு தெரியாது என கூறிய அமைச்சர் துரைமுருகன்!