சென்னை:வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரிக்கான மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்ற நிலையில், கட்சியிலிருந்து பிரிந்து மீண்டும் கட்சியில் வந்து தன்னை இணைத்துக் கொண்டவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என எம்பி விஷ்ணுபிரசாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கரூர் எம்பி ஜோதிமணி ட்விட்டரில் காட்டமாக கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். அதில், "காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் ரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலுக்கு செவிமடுக்கவில்லை.
நீண்ட காலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.