தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 17, 2020, 8:03 PM IST

ETV Bharat / state

சி.ஏ.ஏ எதிர்ப்பு தீர்மானம் - ஏற்க மறுத்த சபாநாயகரின் செயலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு!

சென்னை : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முன்வைத்த தீர்மானத்தை ஏற்க முடியாது என சபாநாயகர் தெரிவித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

Congress MLA'S to walk out condemning TN Speaker's action over anti-caa resolution
சி.ஏ.ஏ எதிர்ப்பு தீர்மானத்தை ஏற்க மறுத்த சபாநாயகரின் செயலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தொடர்பிலான கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை இயற்றக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், தீர்மானத்தை சபாநாயகர் தனபால் நிராகரித்ததையடுத்து, காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வளாகத்திற்குள்ளேயே சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., உள்ளிட்டவற்றை எதிர்த்தும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழுத் தலைவர் ராமசாமி, ’தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளான திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை இயற்ற வேண்டும் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்கெனவே இருந்த வகையில் பழைய முறையே நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

இது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்திருந்தோம். அதற்குரிய பதிலை கடிதம் மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தந்திருக்க வேண்டும்.

சி.ஏ.ஏ எதிர்ப்பு தீர்மானத்தை ஏற்க மறுத்த சபாநாயகரின் செயலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு!

ஆனால், அது தொடர்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. காரணம் சொல்லாமல் அதனை நிராகரித்ததாக சொல்லிவிட்டனர். அதேபோல் இன்றும் ஒரு தீர்மானத்தை அளித்திருக்கிறோம். அதையும் ஏற்க முடியாது என சபாநாயகர் தெரிவித்துவிட்டார்.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசாங்கம், மத்திய பாஜக ஆட்சிக்கு அடிமைப்பட்ட அரசாக இருந்து வருகிறது. சிறுபான்மை மக்களின் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரி தான் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்திலும் தடியடி நடத்தியுள்ளார். ஏன் தடியடி நடத்தினார்கள்? அவற்றை நடத்த சொன்னது யார் என்று கேள்வி எழுப்பினோம்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்க முதல் அமைச்சர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

சிறுபான்மையின மக்கள் பாதிக்கக் கூடாது என்கிற வகையில் நாங்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப அனுமதி இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே இந்த அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறோம்' என்றார்.

இதையும் படிங்க : வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தியது ஏன்? பேரவையில் முதலமைச்சர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details