சென்னை: தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் எவர்கள் நல்லது செய்கிறார்களோ அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர்களை இழிவு படுத்தும் நோக்கத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருவதாகச் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவருமான செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில், "திருச்சியில் இன்று (அக்.23) நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் 'பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பப்பட்டார்கள்' என்று தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் சிறப்பு செய்திட ராபர்ட் கால்டுவெல் என்ற மொழியியல் அறிஞரைச் சிறுமைப்படுத்தும் முயற்சியில் இழிவு படுத்தும் விதமாக ஆளுநர் பேசியிருப்பதற்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தமிழ்நாட்டில் வருவதற்கு முன்பே இந்தியாவின் தொன்மையான, சிறப்பான மொழி சமஸ்கிருதம் என்றும், தமிழ்மொழி உட்பட அனைத்து மொழிகளும் அந்த மொழியிலிருந்துதான் தோன்றியது என்ற மாயை இந்தியாவில் நிலவியது. மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் பல மொழிகளை ஆராய்ந்து, சமஸ்கிருதத்திற்கு முன்பிருந்த மொழி தமிழ்மொழி என்றும், அதன் தொன்மையையும், சிறப்பையும் ஆய்வின் மூலம் உலகத்திற்கு உணர்த்தியவர்" என்று குறிப்பிட்டு இருந்தார்.