சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல்வேறு போராட்டங்கள் இன்று (ஜூலை.08) நடைபெற்று வருகின்றன.
இதனையொட்டி தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தென் சென்னை மத்திய மாவட்டத் தலைவர் முத்தழகன் தலைமையில் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியை தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி, மாநிலச் செயலாளர் இலா பாஸ்கரன், மாவட்டப் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம், மாநிலச் செயலர் செரிப், மாவட்ட பொதுச் செயலர் ராஜராஜேஸ்வரி, மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி உமா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை காமாராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த சைக்கிள் பேரணியில் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். நெசப்பாக்கம், கே.கே.நகர், உதயம் திரையரங்கம், அசோக் பில்லர், வடபழனி, கோடம்பாக்கம், தி.நகர் வழியாக வந்து இறுதியாக சைதாப்பேட்டை சின்ன மலையில் உள்ள ராஜிவ்காந்தி சிலை முன்பு இந்தப் பேரனி நிறைவு பெற்றது.