கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பட்டியலின சமூகத்தினரையும், இஸ்லாமிய சமூக மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இதனடிப்படையில் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி கேள்வித்தாளில், பட்டியலின சமூகத்தினர் யார் என்ற கேள்விக்கு, ‘தீண்டதகாதவர்’ என்பது விடையாக குறிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், இஸ்லாமியர்களின் பொதுவான வேறுபாடுகள் பற்றிக் குறிப்பிடுக என்ற கேள்விக்கு ‘இஸ்லாமியர்கள் தங்கள் இனப்பெண்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை’ என்ற பதிலைத் தெரிவு செய்ய வேண்டும் என்றிருந்தது. இதுபோன்ற பாடப்பகுதிகள், கேள்விகளுக்குக் கல்வியாளர்கள் பெரும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சையை கிளப்பிய கேள்விதாள் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாமல் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இது போன்ற பாடத்தை இடம்பெறச் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், சிறுபான்மையினர், பட்டியலின மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் சிபிஎஸ்இ 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பகுதிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார்.
மேலும், இத்தகைய கருத்துகளோடு இளம் வயது மாணவர்களுக்குப் பாடங்களைத் தயாரிப்பதும், அதனை அடிப்படையாகக் கொண்டு தேர்வில் கேள்விகள் கேட்பதும் தவறானது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, பாஜக அரசின் வகுப்புவாத, வர்ணாசிரம கொள்கையை மாணவர்களிடத்தில் புகுத்துவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சியாகவே பார்க்கமுடிகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.