சென்னை: திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் விரிவுபடுத்தப்பட்ட செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் கூடியது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மூத்தத் தலைவர்கள் வீரப்ப மொய்லி, பள்ளம் ராஜு, நிதின் ராவத், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திமுக எத்தனை இடங்களை வழங்கினால் கூட்டணி தொடரலாம், கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடலாமா உள்ளிட்ட கருத்துகள் கேட்கப்பட்டு, காங்கிரஸ் மேலிடத்திற்குத் தெரிவித்து அதற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, "தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக திமுகவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வரவில்லை. எத்தனை இடங்களைக் கேட்டுப் பெறுவோம் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.
எத்தனை தொகுதிகளை திமுக வழங்கினால் கூட்டணியில் தொடரலாம் என நிர்வாகிகள் கடிதம் வாயிலாக எழுத்துப்பூர்வமாகத் தரும்படி கே.எஸ். அழகிரி செயற்குழுக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.