அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராகவும், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராகவும் வலம் வந்தவர் ஜி.கே. மூப்பனார். 1997ஆம் ஆண்டு தேவ கவுடா அரசு கலைந்தபோது, ஐக்கிய முன்னணியின் சார்பில் மூப்பனாரை பிரதமர் பதவியில் அமர வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், அதனை முற்றிலுமாக நிராகரித்த இவர், இரண்டு முறை தன்னைத் தேடி வந்த மத்திய அமைச்சர் பதவியையும் நிராகரித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அக்கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். என்ன தான் கருத்து வேறுபாட்டினால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினாலும், பாஜக எதிர்ப்பில் திடமாய் இருந்தவர் மூப்பனார். அக்கட்சியுடன் கூட்டணி வைத்ததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ்.
இவ்வாறு பாஜக எதிர்ப்பில் கடுமையாக இருந்த மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ், இன்று ஜி.கே. வாசன் தலைமையில் வேறு வழியின்றி அதிமுக - பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. இதையடுத்து, ஜி.கே. வாசனை கடுமையாக சாடும் விதமாக நாள்தோறும் அறிக்கைகள் வெளியிட்டு அரசியல் செய்து வருகிறார் தற்போதைய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி.
மூப்பனாரின் நினைவு நாளான நேற்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் என்ற முறையில் அவரின் நினைவிடத்திற்குச் சென்று கே.எஸ்.அழகிரி மரியாதை செலுத்தாதது விமர்சிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தரப்பில் இருந்து அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் குமரி ஆனந்தன் மட்டுமே அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, பாஜக மாநில தலைவர் தமிழிசை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மூப்பனார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தியிருப்பது மாபெரும் காங்கிரஸ் தலைவரான மூப்பனாரை பாஜகவுக்கு காங்கிரஸ் தாரைவார்த்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.