தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதி நிலைநாட்ட முடியும்: கே.எஸ்.அழகிரி..! - தெலங்கானா மாநில தேர்தல்

K S Alagiri: பாஜக அரசு சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக அரசாக இருக்கிறது. அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதி நிலைநாட்ட முடியும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Congress Committee President K S Alagiri said Social justice can be established only through caste wise census
சாதிவாரி கணக்கெடுப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 10:59 PM IST

சென்னை:தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஐந்து ஆண்டுகளில் அகில இந்தியப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின சாதிகள் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் பிரதிநிதித்துவம் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதைக் காட்டும் சில திடுக்கிடும் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய குடிமைப் பணிகளில் நேரடியாக எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர் என்றும், இதில் பிற பின்தங்கிய வகுப்பினர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் எவ்வளவு பேர் நியமிக்கப்பட்டனர் என்ற கேள்விக்கு ராஜ்யசபாவில் பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், பிற பின்தங்கிய வகுப்பினருக்கு 15.92 சதவிகிதமும், எஸ்சி பிரிவினருக்கு 7.65 சதவிகிதமும் எஸ்டி பிரிவினருக்கு 3.80 சதவிகிதமும் பிரதிநிதித்துவம் தரப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். பணிக்கு மொத்தம் 2,163 பேரும், ஐ.பி.எஸ். பணிக்கு 1,403 பேரும் இந்திய வன பணிக்கு 799 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 334 எஸ்சி பிரிவினரும், 166 எஸ்டி பிரிவினரும், 695 பிற பின்தங்கிய சமுதாயத்தினரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று பதில் அளித்தார்.

இந்த குறைவான பிரதிநிதித்துவம் சாதி அடிப்படையிலான மோசமான பாகுபாட்டை காட்டுகிறது. இந்த பாகுபாடு அவர்களை சமுதாயத்தில் உயர்வதைத் தடுக்கிறது. பிற பின்தங்கிய சமுதாயத்தினருக்கு அவர்களுக்கான உரிமையை வழங்காவிட்டால் சமூக நீதி கனவு நிறைவேறாது. அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்துவதன் மூலமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.

இதற்கு ஒரே வழி, தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதி வாரி கணக்கெடுப்பு மட்டுமே. பின்தங்கிய வகுப்பினருக்கு எதிராக பாஜக அரசு இருப்பதால் தான், சாதிவாரி கணக்கெடுப்பை முடக்கப் பார்க்கிறார்கள். மகளிர் இடஓதுக்கீடு கூட முழு மனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலை, வாக்கு வங்கி அரசியலை கணக்கில் கொண்டு, கண்துடைப்புக்காக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

மகளிர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் கழித்து தான் அமலுக்கு வரும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருப்பது இந்த ஏமாற்று வேலைக்கு சிறந்த சான்று. சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது. அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.

கடந்த 2008-ஆம் ஆண்டு பிற பின்தங்கிய சமுதாயத்தினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தான் கொண்டு வந்தது. ஆனால், பின்னர் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு 27 சதவிகித இடஒதுக்கீட்டை நிறைவேற்றவே மேலே கூறப்பட்ட புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் வழிவந்த பா.ஜ.க., என்றைக்குமே உயர்ஜாதியினர் ஆதரவு அமைப்பாக இருந்திருக்கிறதேயொழிய ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சமூகநீதி கொள்கையை முழு மனதோடு ஏற்றுக் கொண்டதில்லை.

அடுத்து வருகிற 2024 தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படுகிற போது, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமுதாயத்தில் இருக்கிற ஏற்றத்தாழ்வுகளை, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று தலைவர் ராகுல்காந்தி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறார். அது நிறைவேறுகிற காலமே சமூகநீதியின் பொற்காலமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக முன்னெடுத்து வருகிறது. முன்னதாக சத்தீஸ்கரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்தார். அதேபோல் இன்று தெலங்கானாவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: ராகுல் காந்தி வாக்குறுதி!

ABOUT THE AUTHOR

...view details