பெருந்தலைவர் காமராஜரின் 119ஆவது பிறந்தநாள் நேற்று (ஜூலை 15) விமரிசையாக கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளையொட்டி பாமக, புரட்சி பாரதம் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில், அக்கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மகாராஷ்டிரா மாநில எரிசக்தித் துறை அமைச்சர் நிதின் ராவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.அழகிரி, "இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதற்கு காரணம் காந்தி, நேரு போன்ற தலைவர்கள் தான். விடுதலைக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதம், மொழி, சாதி பெயரில் மக்களை பிளவுபடுத்த பாஜக நினைக்கிறது- கே.எஸ் அழகிரி
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. ஆனால், இதற்கு நேரெதிர் கொள்கைகள் கொண்ட பாஜக கையில் தற்போது நாடு உள்ளது.
கொங்குநாடு எனப் பாஜகவினர் பேசி வருகின்றனர், இப்படி பிரித்துக்கொடுத்தால் நாளை மதுரையை மையமாக வைத்து பாண்டிய நாடு வேண்டும் என கோருவார்கள். குமரி, நெல்லையை தனியாகப் பிரிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழும். சிதம்பரத்தை தலைமையிடமாக வைத்து தனி நாடு வேண்டும் என நான் கேட்பேன்.
பாஜக மதம், மொழி, இனம், சாதி என பலவற்றின் பெயரில் மக்களை பிளவுப்படுத்த நினைக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்குமான ஓரே கட்சி காங்கிரஸ்" என்றார்.
இதையும் படிங்க:'மீடியாவை கண்ட்ரோல் பண்ணுவோம்..' - அண்ணாமலை பகிரங்க மிரட்டல்