சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், 18 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று (செப். 27) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் தங்கள் அனைவரது ஒரு மாத ஊதியமான 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கரோனா நிவாரண நிதியாக ஸ்டாலினிடம் அளித்தனர்.
பிரதமரால் முடியாததைச் செய்த முதலமைச்சர்
இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, “காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அவர்களின் ஒருமாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா நிவாரண பணிகளைச் சிறப்பாகச் செய்துவருவதற்கும், பெட்ரோல் விலையை மூன்று ரூபாய் குறைத்ததற்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம். இந்திய மக்கள் போற்றும் சாதனை இது. பிரதமரால் முடியாததை முதலமைச்சர் செய்துள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதும், குடியுரிமை திருத்தச் சட்டங்களை எதிர்த்தும் சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியதும் பேராண்மைமிக்கவை.
கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை முதலமைச்சருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கினோம். நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: சேலம் சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்