கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் கைக்கு வாக்கும் சேகரிப்பார் - ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூட்டணிக்கு ஆதரவு கோரி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் அசல் மௌலானா மற்றும் மாநில மூத்த நிர்வாகிகள் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் துணைத்தலைவர்கள் மௌரியா, தங்கவேலு உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “ஈரோடு கிழக்கு தொகுதியில் யாருக்கு ஆதரவு தருகிறோம் என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தான் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ஆலோசிக்கப்பட்டு எங்கள் நிலைப்பாடு தெரிவிப்போம்.தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது கலந்து ஆலோசித்து நல்லது எது தீயது எது என்பதெல்லாம் குறித்தும், மக்களுக்கு எது நல்லது என்பதைக் குறித்தும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். தனித்துப் போட்டியா அல்லது மற்ற கட்சிக்கு ஆதரவா என்பது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனக்குத் தமிழ்நாட்டு முன்னேற்றம் தான் தேவை" எனத் தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், "கமல்ஹாசனைச் சந்தித்து ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான எனக்கு ஆதரவு தர வேண்டும், திமுக கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என எங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளோம். நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாகத் தெரிவித்தார்.
கமல் ரத்தத்தில் தேசியமும், காங்கிரசும் கலந்துள்ளது. அவரது தந்தை காங்கிரஸ் கட்சியில் தியாகியாக இருந்தவர். காமராஜருக்கு நெருக்கமானவர். எனவே காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுள்ளோம். நிர்வாகிகளோடு பேசி முடிவெடுப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒரு நல்ல முடிவை இன்று அவர் அறிவிப்பார். அதேபோல ஈரோட்டில் திமுக கூட்டணிக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் விருப்பத்தைத் தெரிவித்துள்ளோம். கண்டிப்பாக அதைச் செய்வார் என நம்புகிறேன்.
கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல கைக்கு வாக்கும் சேகரிப்பார் என நம்புகிறேன். என் மனதளவில் அவர் உத்தரவு தந்து விட்டார் எனத் தான் நம்புகிறேன். பாஜக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளைப் பதவி இழக்கச் செய்து, அதிகாரத்தை வைத்து மிரட்டி ஆள் சேர்க்கிறார்கள். நாங்கள் கொள்கை ரீதியான ஆட்களைச் சந்தித்து வருகிறோம்.
கமல்ஹாசன் மதச் சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர். சாதி வித்தியாசம் அவருக்கு கிடையாது. திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு தருவார் என நம்புகிறோம். அதிமுக 2 ஆக உடையவில்லை 4 ஆக உடைந்துள்ளது. கண்டிப்பாக அதிமுகவைப் பொறுத்தவரை 4 பேரும் சேர்ந்து பாஜகவை ஆதரிக்கும் வகையில் பாஜக அதிகாரத்தைப் பயன்படுத்தும்.
கடந்த தேர்தலில் கமல்ஹாசன் கட்சி சுமார் 11,000 வாக்குகள் பெற்றுள்ளனர். இது சாதாரண விஷயம் இல்லை. மக்கள் மத்தியில் கமல் செல்வாக்கு பெற்றுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஜனநாயக முறைப்படி சந்திப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பாஜக முறையைப் பின்பற்ற மாட்டோம். பிரிந்துள்ள 4 அதிமுக கட்சிகளும் பாஜகவுக்கு ஜால்ரா அடிக்கும் கட்சிகளாக உள்ளது. அந்த தொகுதியில் பாஜகவை நிற்க வைத்து 4 கட்சிகளும் பாஜகவிற்கு ஆதரவு தருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதை நான் வரவேற்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Erode East: தனித்து களம் காணும் தேமுதிக.. வேட்பாளரை அறிவித்தார் பிரேமலதா!