சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், இந்தியாவிலேயே முதன்முறையாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் 5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்கள் தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்றதற்கான சான்றிதழை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மலேரியா, காசநோய், ஹீமோகுளோபின், ரத்த சர்க்கரை போன்றவற்றைக் கண்டறிய அடிப்படை வசதிகளைக்கொண்ட ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.
ஆய்வக ஆய்வுகளின் தரத்தை உறுதி செய்வதற்காக 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆய்வகங்கள், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் உயிர் வேதியியல் துறையின் வெளிப்புற தர உத்திரவாத சேவைகள் மூலம் இத்திட்டத்தில் பங்கேற்கின்றன. இதன் மூலம் ஆய்வக முடிவுகளின் தரம் மூன்றாம் தரவு திறன் சோதனை வழங்குநரால் மதிப்பிடப்படுகிறது.
இந்தியாவிலேயே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கும் ஆய்வகங்களுக்கும் தரக்கட்டுப்பாடு திட்டத்தை தமிழ்நாடு மட்டுமே செயல்படுத்தியுள்ளது. ஆய்வகங்களுக்கான தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் ஒரு அங்கமாகும். இது சர்வதேச தரத்தில் மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களுக்கு ஆய்வக அங்கீகாரம் வழங்குகிறது. மருத்துவ ஆய்வகங்களுக்கான தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம், தன்னார்வ அங்கீகார திட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் சர்வதேச தரநிலை ஐஎஸ்ஓ 15189-ன்படி ஆய்வகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் தரத்தை எட்டியுள்ளன.
தற்பொழுது அடிப்படை ஆய்வகங்களுக்காக தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் ஒரு தன்னார்வத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவ நுழைவு நிலை சோதனை ஆய்வகத் திட்டம் எனும் இத்திட்டத்தின் மூலம் தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற திறன் சான்று வழங்குநரிடமிருந்து மட்டுமே திறன் சோதனை சான்று பெறப்படும்.