சென்னை:தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2022 - 2023ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கடந்த மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு, மே 8ஆம் தேதி அரசுத் தேர்வுத்துறை மூலம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதன்படி, தமிழ்நாட்டில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதேநேரம், தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகலைப் பெற்று, அதில் தவறுகள் இருந்தால் மதிப்பெண்களை திருத்தம் செய்ய மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்தது.
இதன்படி விண்ணப்பித்து விடைத்தாள் நகலை மாணவர்கள் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இவ்வாறு விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மதிப்பெண்கள் அதிகமாக போடப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அதிலும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள தகவலும் வெளியாகி உள்ளது.
விடைத்தாள் நகலில் மதிப்பெண்கள் வழங்கிய விபரத்தை பதிவு செய்ததைக் காட்டிலும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு முடிவுக்கான மதிப்பெண் பட்டியலில் கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் முதல் 7 மதிப்பெண்கள் வரை போடப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.