சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் பார்களை நடத்துவதற்கான டெண்டரை உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் டாஸ்மாக் நிர்வாகம் பார் உரிமையாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி ஒப்பந்தம் கோரும்போது வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என சங்கம் நிர்பந்த்தித்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 5400 டாஸ்மாக் கடைகளும், 3230 டாஸ்மாக் பார்களும் உள்ளன. பார்களை நடத்துவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெண்டர் விட்ட பிறகு உரிமையாளர்கள் குறிப்பிட்ட பணத்தை வரைவோலை மூலம் செலுத்தி பார்களை டாஸ்மாக் மதுபான கடை அருகில் வைத்து திண்பண்டங்களை விற்பனை செய்யலாம்.
இதற்கிடையே டாஸ்மாக் பார்கள் தொடர்பான டெண்டர் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து சென்னை மண்டலத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் செயல்படாமல் உள்ளன. இதனால் சென்னையில் மதுப்பிரியர்கள் சாலை ஓரங்களில் மது அருந்தி வருகிறார்கள்..
இதற்கு காரணம் டாஸ்மாக் துறைக்கும், பார் டெண்டரை எடுக்க முயற்சிப்பவர்களுக்கும் பெரும் பிரச்னை உள்ளது என டாஸ்மாக் வட்டாரங்களில் பேசப்படுகிறது. முன்னதாக யார் பாருக்கு உரிமை கொள்கிறார்களோ அவர்கள் வரைவோலை மூலம் எவ்வளவு பணம் செலுத்துகிறார்களோ அந்த பணத்தை டாஸ்மாக் அமைச்சகதுக்கும் கொடுக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் அந்த செய்தியை மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். அன்பரசன் கூறுகையில், “கடந்த அக்டோபர் மாதம் டாஸ்மாக் துறை டெண்டர் கோரியது. ஆனால் அந்த டெண்டரில் அதிக விலை மற்றும் சம்பந்தமில்லாத தகவல்கள் இருந்தன. எனவே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மீண்டும் ஏலமிட டாஸ்மாக் துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அரசிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. மீண்டும் டெண்டரும் விடவில்லை. இதனால் சென்னை மண்டலத்தில் உள்ள 700 பார்களும் செயல்படாமல் அரசுக்கு மாதம் 11 கோடி நட்டம் ஏற்படுகிறது.
மேலும் டெண்டர் எடுக்க வரைவோலை மூலம் பணம் செலுத்தாமல், டாஸ்மாக் எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறதோ, அவர்கள் எங்களை தொடர்பு கொண்டு நேரடியாக கையில் பணத்தை கேட்கிறார்கள். இதற்கு மாறாக டாஸ்மாக் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் வரைவோலை மூலம் பணம் செலுத்தினால் மட்டுமே பார் நடத்த அனுமதி கொடுக்கப்படும் என்கின்றனர். இதனால் டாஸ்மாக் ஏலத்தில் பெரும் குழப்பம் நீடிக்கிறது” என தெரிவித்தார்.
இதனிடையே மத்திய மற்றும் வட சென்னையில் சில டாஸ்மாக் பார்கள் சட்டத்திற்கு புறம்பாக நடத்தி வருகிறதா? என்ற கேள்விக்கு "இந்த பார்களை நடத்தி வருபவர்கள் எல்லாம், முறைகேடாக நடத்தி வருகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை" என தெரிவித்தார். இது குறித்து டாஸ்மாக் நிர்வாகத்தின் மேலாண்மை இயக்குனர் எல். சுப்பிரமணியன், டெண்டர் விடுவது தொடர்பான விஷயம் நீதிமன்றத்தில் உள்ளது என முடித்து கொண்டார்.
இதையும் படிங்க: உதயநிதியை எதிர்த்து சவுக்கு சங்கர் போட்டியிட்டால் ஆதரிப்போம்- சீமான் அதிரடி