சென்னை:தமிழக அரசிற்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் அதிகளவில் மோதல் போக்கு ஏற்படுவதற்குக் காரணங்களில் முக்கியமானது உயர் கல்வித்துறையாகத் தான் இருக்கிறது. மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்ற வேந்தர் பதவியை ஆளுநரிடம் இருந்து முதல்வருக்கு மாற்ற வேண்டும் என்பதற்காக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது வரையில் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்.
மேலும், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் போது, தமிழ்நாடு அரசைக் கலந்து ஆலோசிக்காமல் துணை வேந்தர்களைத் தேர்வு செய்து நியமனம் செய்கிறார் என்பதே அரசின் மிகப்பெரியக் குற்றச்சாட்டாக உள்ளது.
பல்கலைக் கழகத்தின் வேந்தருக்கும், இணை வேந்தருக்குமான கருத்து வேறுபாடு: தமிழக ஆளுநரும், மாநிலப் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி மற்றும் இணை வேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகளால் இணை வேந்தர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
மேலும் பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு ஆளுநர் தேதிக் கொடுக்காமல் இருப்பதால் தமிழகத்தில், கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் காத்திருக்கின்றனர். இதனால், வெளி நாடுகளுக்குச் சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசின் ஆலோசனைகளை ஆளுநர் கேட்பது இல்லை எனவும், உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஏற்கனவே குற்றஞ்சாட்டிய நிகழ்வும் நடைபெற்றது.
துணைவேந்தர் தேர்வுக்குழு நியமனம்: கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்திற்கான துணைவேந்தர் தேர்வுக்குழுவில் பல்கலைக் கழக மானியக்குழுவின் பிரதிநிதி உள்ளிட்ட 4 பேர் கொண்ட தேடுதல் குழுவினை ஆளுநர் நியமனம் செய்தார்.
இந்த நியமனத்திற்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து, சென்னைப் பல்கலைக் கழகத்திற்குத் தேடுதல் குழுவை நியமனம் செய்துள்ளது. இதனால், 3 பல்கலைக் கழகத்திற்கும் துணைவேந்தர்கள் நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
மேலும், சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் பல்கலைக் கழக மானியக் குழுவின் பிரதிநிதியைச் சேர்ப்பது குறித்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பல்கலைக் கழக மானியக்குழு பிரதிநிதி: கல்வி பொதுப் பட்டியலில் உள்ளதால், மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டி நிலை உள்ளது. ஆனாலும் பல்கலைக் கழகங்களில் பாடங்களை நடத்துவதற்குத் தேசிய அளவில் அங்கீகாரம் வழங்கும் பல்கலைக் கழக மானியக்குழுவிடம் தான் உள்ளது. எனவே பல்கலைக் கழக மானியக்குழுவின் பிரதிநிதியையும் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் தரப்பில் கூறப்படுகிறது.
மாநிலக் கல்விக் கொள்கை: தமிழ்நாட்டிற்கு என தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழுவின் பணிகள் முடிந்தாலும், மாநிலக் கல்விக் கொள்கை அரசிடம் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநில பல்கலைக் கழகங்களின் எல்லைகளைக் குறைத்து புதியப் பல்கலைக் கழகங்களை உருவாக்கியதாலும், அதன் வருவாய் குறைந்ததாலும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவும் மிகவும் தள்ளாடும் நிலையில் உள்ளன.
இதையும் படிங்க:பொன்முடியின் உயர்கல்வித்துறை இலாகா அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு..!