கரோனா ஊரடங்கு விதிகள் கடுமையாக அமலில் இருந்த கடந்த மே மாதம், திருவள்ளூரைச் சேர்ந்த அன்பரசன் என்பவர், தனது உறவினரை குருவராசன்பேட்டை என்ற ஊரில் விட்டுவிட்டு காரில் வீடு திரும்பியபோது, திருத்தணி அருகே அவரது காரை, காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது வாகனத்தில், 22 பிராந்தி குவார்ட்டர் பாட்டில்களும், 6 பீர் பாட்டில்களும் இருந்துள்ளன. இதையடுத்து, திருத்தணி காவல் துறையினர், அன்பரசனின் காரை பறிமுதல்செய்து, அவரை கைதுசெய்தனர். அன்பரசன் பிணையில் விடுதலையான நிலையில், காரை விடுவிக்கக் கோரி காவல் துறையிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனு பரிசீலிக்கப்படாததால், காரை விடுவிக்க காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி, அன்பரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அதில், பறிமுதல்செய்யப்பட்டதாக கூறப்படும் மது பாட்டில்களை காவல் துறையினர், இதுவரை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஒப்படைக்கவில்லை எனவும், இதிலிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் என்பது நடக்கவில்லை என்றே கருத வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை மதுவிலக்குப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் நிராகரித்துள்ளதால், வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
காவல் துறை விளக்கத்தை ஏற்ற நீதிபதி, மதுபானம் கடத்தியதாகப் பறிமுதல்செய்யப்பட்ட காரை விடுவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.