சென்னை :கோனம்பேடு கிராம பொது நல சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், “தங்கள் கிராம பகுதியில் தற்போது நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. தங்களது கிராமத்தில் பாதாள சாக்கடை வசதியோ, ரேஷன் கடை கட்டிடமோ சமுதாய நலக்கூடம் என எந்த ஒரு அரசு கட்டிடங்களும் இல்லை.
குறிப்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம், அருகில் கிராம நிலங்கள், நீர்நிலங்களை ஆக்கிரமித்து மின்சார துணைமின் நிலையம், தனியார் பாதை, மாணவர், மாணவியர் தங்கும் விடுதி ஆகியவை கட்டப்பட்டுள்ளது.
அதேசமயம், அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி கடந்த 1949ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வக வசதிகள் கிடையாது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலங்களை பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.