தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 28, 2020, 9:05 PM IST

Updated : Aug 28, 2020, 10:09 PM IST

ETV Bharat / state

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வசந்தகுமார் எம்.பி., மறைவு: தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வசந்தகுமாரின் மறைவிற்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வசந்தகுமார் மறைவு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வசந்தகுமார் மறைவு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமார் உடல்நலகுறைவு காரணமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று (ஆகஸ்ட் 28) செய்தி வெளியிட்டது. இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த எச். வசந்தகுமார் (70) உயிரிழந்து விட்டார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வசந்தகுமார் 1950ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அகதீஷ்வரத்தில் பிறந்தார். தொடக்கத்தில் மளிகைக் கடை நடத்தி வந்த அவர், பெரும் தொழிலதிபராக வளர்ந்தார். பின்னர் 2006, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றிப்பெற்றார். தற்போது எச். வசந்தகுமார் மறைவிற்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவைக் கேட்டு வேதனையடைந்தேன் என திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
  • எம்.பி வசந்தகுமாரின் உயிரிழப்பு காங்கிரஸுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தூணாக இருந்தவர் எம்.பி வசந்தகுமார் என புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என்றும் கூறியுள்ளார்.
  • எம்.பி வசந்தகுமாரின் மறைவால் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என அக்கட்சி எம்பி ஜோதிமணி ட்வீட் செய்துள்ளார்.
  • உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார், பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர் என அவரது மறைவுக்கு திமுக எம்பி கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • வசந்த குமார் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வணிகத்தில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவரும், உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என்பதை நிரூபித்தவரும், எவ்வித அரசியல் சூழல் ஏற்பட்டாலும் தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்த வசந்தகுமாரின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
  • எம்.பி வசந்தகுமாரின் புன்னகை, எளிமையான அணுகுமுறை, ஏழை எளிய மக்களுக்கு உதவும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இழப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
  • நடுத்தர குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த எம்.பி வசந்தகுமார் மறைவு தமிழ்நாட்டிற்கே இழப்பு என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
  • உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார், உறுதியான காங்கிரஸ் தலைவர். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர். இவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே இழப்பாகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
  • கடுமையான உழைப்பால் உயர்ந்து ஒரு பெரும் வணிக நிறுவனத்தை உருவாக்கிய வசந்த குமார் ஒரு போதும் தனது தொடக்க காலத்தை மறவாதவர் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தொரிவித்துள்ளார்.
  • கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவராக விளங்கி, மக்கள் சேவையே மகேசன் சேவை என வாழ்ந்தவர். காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கைகளில் உறுதியாக இருந்தவர். எல்லாத் தரப்பு மக்களிடமும் குறிப்பாக சிறுபான்மை சமூக மக்களிடம் மிகுந்த நேசம் மிக்கவராக வாழ்ந்தவர் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார்.
Last Updated : Aug 28, 2020, 10:09 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details