சென்னை:கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று (ஜூலை 7) தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் பிற அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பவாரியா கொள்ளையர்களை பிடித்த முன்னாள் டிஜிபி எஸ்.ஆர்.ஜாங்கிட் ஐபிஎஸ் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பவாரியா கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் மறைந்த விஜயகுமார் ஐபிஎஸ் தனக்கு இன்றியமையாத உதவியாக இருந்ததாக மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திகார் சிறை வளாகத்தில் எங்களால் ஜெல்தார் சிங் பவாரியாவிடம் விசாரணை செய்த புகைப்படம் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், 'எங்கள் அன்பான சி.விஜயகுமார் ஐபிஎஸ், கோவை டிஐஜி அவர்கள் இப்போது இல்லை என்ற அதிர்ச்சியான செய்தியைக் கேட்டதும் என் இதயம் ரத்தம் வருகிறது. எனது சொந்த துயரத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை, அதே போல் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
9.1.2005 அன்று கும்மிடிப்பூண்டி அருகே எம்.எல்.ஏ. சுதர்சனம் சுட்டுக்கொல்லப்பட்ட பரபரப்பான வழக்கு தொடர்பான விசாரணைக்காக 4 இளம் டிஎஸ்பிக்களுடன் விஜயகுமார் ஐபிஎஸையும் நியமித்து இருந்தாகவும். இதற்காக, நாங்கள் நாடு முழுவதும் குறிப்பாக வட இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்த நிலையில், இறுதியாக பவாரியா குற்றவாளிகள் மீது எங்கள் கைகளை வைத்தாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் நடந்த 24 சம்பவங்களைப் போல, நாடெங்கும் சுமார் 100-க்கும் அதிகமான சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்புடையது எனக் கண்டறியப்பட்டது. இந்த சவாலப் பணியில் நான்கு இளம் டிஎஸ்பிக்களின் தலைமையிலான குழுக்களும் வட இந்தியாவின் நான்கு மாநிலங்களுக்கு பொறுப்பேற்றிருந்தன. இதில் விஜயகுமார் பஞ்சாப் மற்றும் டெல்லி பகுதிக்காக அணி பொறுப்பாளராக இருந்தார். இந்த பவாரியா கொள்ளையர்களை பிடிப்பதில் முக்கியப் பங்கு வகித்ததாக புகழாரம் சூடியுள்ளார்.
விஜயகுமார் மற்றும் பிற அதிகாரிகள் தர்மசாலாவில் (பாரத்பூர், ராஜஸ்தான்) எங்கள் உணவு சமைத்த புகைப்படம் இந்த பவாரியா கொள்ளையர்களை பிடித்தப் பிறகு, தன்னை சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையராக நியமித்ததாகவும், அப்போது சிவில் சர்வீஸ் பதவிக்கு தயாகி வருவதாகவும் அதற்காக தனக்கு உதவி செய்யுமாறும் விஜயகுமார் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று மாநில காவல்துறை அந்தஸ்தில் இருந்து இந்திய காவல் பணிக்கு சென்றுதும் நடந்த முதல் செய்தியாளர் சந்திப்பில் தனக்கு அன்புடன் நன்றி கூறியதாகவும் தெரிவித்தார். தனது கடின உழைப்பு, நேர்மை மற்றும் குழுவாக இணைந்து பணியாற்றும் திறன் ஆகியவற்றின் மூலம் ஐபிஎஸ் ஆக பல முக்கியப் பணிகளில் விஜயகுமார் தனது முத்திரையைப் பதித்தார். ஒருவேளை அவர் உயிர்ப்பிழைத்திருந்தால் இன்னும் பல சாதனை செய்து பல விருதுகளைப் பெற்றிருப்பார் என்று அவருக்கு புகழாரம் சூட்டினார். அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்களும், விஜயகுமாரின் சாதனைகளும் காலத்தால் அழியாதவை என்றும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாகவும் எஸ்.ஆர்.ஜாங்கிட் ஐபிஎஸ் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Vijaykumar IPS - சினிமா காட்சிகளின் சம்பவக்காரன்.. தெறி முதல் தீரன் வரை..!