சேலம் தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவுசாயி அம்மாள் நள்ளிரவு 12.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93. இதனையடுத்து, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
முதலமைச்சரின் தாயார் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தவுசாயி அம்மாள் மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.